சென்னை: பிப்ரவரி 11-
திமுக பூத் கமிட்டி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவிடந்தையில் இன்று நடைபெறுகிறது. இதில் 1.50 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மண்டல வாரியாக இளைஞரணி சந்திப்பு, மகளிரணி மாநாடுகள், 234 தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை, வீடுவீடாக பிரச்சாரம் என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்த ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இயக்கத்தை திமுக முன்னெடுத்தது.
இதையடுத்து, பூத் ஏஜென்ட்டுகளை தேர்தல் பணிக்கு முழுமையாக தயார் செய்வதற்காக, பயிற்சி மாநாடுகள் 4 மண்டலங்களில் நடத்தப்பட இருக்கின்றன. அதன்படி, சென்னை மற்றும் விழுப்புரம் மாண்டலங்களுக்கான மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் இன்று (11-ம் தேதி) நடைபெறுகிறது. இதில், சுமார் 1.5 லட்சம் வாக்குச்சாவடிக் குழுவினர் கலந்து கொள்கின்றனர். வரும் தேர்தலில் திமுகவினர் எப்படி களப் பணியாற்ற வேண்டும், வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்குகிறார். தொடர்ந்து, வடக்கு மண்டல மாநாடு திருப்பத்தூரில் வரும் 14-ம் தேதியும், தெற்கு மண்டல மாநாடு மதுரையில் 21-ம் தேதியும், மேற்கு மண்டல மாநாடு கோவையில் 27-ம் தேதியும் நடைபெறுகிறது

















