
சென்னை: பிப்ரவரி 11-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்தில், கிராமங்கள்தோறும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் உருவ பொம்மைகளை எரிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து பாரதிய கிசான் சங்கம் (பி.கே.யூ.) நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது. இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் உருவ பொம்மைகளை அனைத்து கிராமங்களிலும் எரிக்க பி.கே.யூ. முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 10, 2026 அன்று டெல்லியில் பி.கே.யூ. தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு விவசாயிகள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தங்கள் விவசாயிகளுக்குப் பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். சமீபத்திய விதை, மின்சார (திருத்த) மசோதா போன்ற அறிவிப்புகள் விவசாயிகளை குறி வைத்திருக்கிறது என்றார். பிப்ரவரி 12 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தத்திற்கு விவசாயிகள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் டிக்கைட் தெரிவித்தார். இந்த வர்த்தக ஒப்பந்தங்களின் உண்மையான விவரங்கள் ரகசியத் திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தியா இந்த ஒப்பந்தங்களிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் அல்லது விவசாயம் தொடர்பான அனைத்து விதிகளையும் நீக்க வேண்டும் என டிக்கைட் வலியுறுத்தினார்.

















