என்எல்சி-யில் ரூ.422 கோடி முறைகேடு

சென்னை: பிப்ரவரி 13-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் மற்றும் கால நீட்டிப்பு வழங்கியதில் ரூ.422 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் கூட்டணி அமைத்து அதிகாரிகள் ரூ.422 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும் கடலூரைச் சேர்ந்த எச்.மணிகண்டன் என்பவர் சிபிஐக்கு கடந்த 2025 ஜூலையில் புகார் அனுப்பி வைத்தார்.
அந்த புகார் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்காததால், என்எல்சி நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர்கூறியிருந்ததாவது: என்எல்சி சார்பில் ஒடிசாவில் உள்ள தலபிரா அனல் மின் திட்டத்துக்கு ஒப்பந்தங்களை வழங்கியது மற்றும் அதில் திருத்தம் செய்ததில், ஒப்பந்த நிபந்தனைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. நகர்ப்புற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை நியமன அடிப்படையில் தன்னிச்சையாக வழங்கியதன் விளைவாக திட்டச் செலவு ரூ.524.50 கோடியாக அதிகரித்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தில் கிடைக்கும் சாம்பலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளபோதிலும், போக்குவரத்து ஒப்பந்தங்களுக்கு டன்னுக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் முறைகேடாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப்படும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியில் மிகப்பெரிய அளவுக்கு மோசடி நடந்துள்ளது.