ஓசூர் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வெட்டிவேர் சாகுபடி

ஓசூர்: பிப்ரவரி 13-
ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் குறுகிய கால காய்கறிகள் மற்றும் கீரைகளை 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு மலைப்பயிர்கள் மற்றும் குளிர் பிரதேசங்களில் விளையும் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
அதே போல, பல விவசாயிகள் தனியார் நிறுவனங் களின் பங்களிப்புடன் வெட்டிவேர் நாற்றுகளை வாங்கி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடையாகும் வெட்டிவேர் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், இழப்பில்லாத வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வெட்டிவேர் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் மலர் மற்றும் காய்கறி, கீரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில், வெளி மாநிலங்களில் அந்தந்த பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை அடிப்படையான பயிர்களையும் இங்கு சோதனை முயற்சியாக சாகுபடி செய்து வருகிறோம். அதன்படி வெட்டிவேர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.
இது எங்களுக்கு நல்ல முறையில் கைகொடுத்து வருகிறது. நறுமணம் மிகுந்த வெட்டிவேர் சோப்பு, ஷாம்பு, மாலை, மேட் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் என 200 வகையான பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும், வெட்டிவேர் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் ஓசூர் பகுதி விவசாயிகளுக்கு வெட்டிவேர் நாற்றுகளை வழங்கி சாகுபடிக்கு ஊக்கம் அளித்து வருவ தோடு, செடிகளை தனி பிளாஸ்டிக் கவர்களில் வைத்து, ஸ்ப்ரே மூலம் தண்ணீர் தெளித்து, 11 மாதங்களில் வேர் வளர்ந்த பின்னர் தனியார் நிறுவனங்கள் வெட்டிவேரை அறுவடை செய்து எடுத்துச் செல்கின்றனர்.
ஒரு கிலோ வெட்டிவேருக்கு ரூ.200 வழங்குகின்றனர். இச்சாகுபடி முறையில் மருந்து தெளிப்பு செலவு இல்லை, நோய்த் தாக்கம் குறைவு என்பதால் எங்களுக்கு வருவாய் இழப்பின்றி உள்ளது. ஓசூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளோம்.
அதிக லாபம் கிடைக்கும் வெட்டிவேர் சாகுபடிக்கு தோட்டக்கலைத் துறையினர் விழிப்புணர்வு செய்வதோடு, சந்தை வழிகாட்டுதல் வழங்கவும், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கவும், சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.