பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

மதுரை: பிப்ரவரி 13
பணம் கொடுக்​காமல் கருவாடு வாங்​கிய காவல் உதவி ஆய்​வாளர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய வழக்​கில், டிஎஸ்பி தலை​மை​யில் விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
ராம​நாத​புரம் பாம்​பனைச் சேர்ந்த குமார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பாம்பன் காவல் நிலை​யம் எதிரே பல ஆண்​டு​களாக கரு​வாட்டு கடை நடத்தி வரு​கிறோம்.
கடந்த ஆண்டு டிச. 19-ல் பாம்​பன் காவல் உதவி ஆய்​வாளர் ஆதர்ஷ் என்​பவர், எங்​கள் கடை​யில் ரூ.1,000-க்கு கருவாடு வாங்​கி​விட்​டு, பின்​னர் பணம் தரு​வ​தாக கூறிச் சென்றார்.
அவர் டிச. 26-ல் மீண்​டும் கருவாடு கேட்​ட​போது என் சகோ​தரர் கொடுக்க மறுத்​து​விட்​டார். இதனால் கோபமடைந்த ஆதர்​ஷ், எங்​களை அசிங்​க​மாகப் பேசி​விட்​டு, கஞ்சா வழக்​கில் கைது செய்து சிறை​யில் அடைப்​ப​தாகக் கூறி காவல் நிலையம் அழைத்​துச் சென்​றார்.
இது தொடர்​பாக காவல் ஆய்​வாளர், ராம​நாத​புரம் எஸ்​.பி.ஆகியோரிடம் புகார் அளித்​தும், உதவி ஆய்​வாளர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே, உதவி ஆய்​வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.
மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி விசா​ரித்​தார். மனு​தா​ரர் தரப்​பில், உதவி ஆய்​வாளர் பணம் கொடுக்​காமல் கருவாடு வாங்​கிச் சென்​றதற்கு ஆதா​ரங்​கள் உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது.
அரசு வழக்கறிஞர் வாதிடும்​போது, “மனு​தா​ரரின் குற்​றச்​சாட்டு காவல் துறை மீது களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் உள்​ளது. குற்​றச்​சாட்​டுக்கு உரிய ஆதா​ரம் அளிக்​க​வில்​லை. ஆதா​ரம் இருந்​தால் உதவி ஆய்​வாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்​துரைக்​கப்​படும்.மனு​தா​ரர் நடை​பாதையை ஆக்​கிரமித்து கடை நடத்தி வரு​வதை தட்​டிக் கேட்​ட​தால், காவல் துறை மீது புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது” என்று கூறப்​பட்​டது. அப்​போது நீதிபதி, “மனு​தா​ரர் கூறும் குற்​றச்​சாட்டு மிக​வும் தீவிர​மான​தாக உள்​ளது.
காவல் துறை​யினர் ஏன் இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​கின்​றனர்? பொய்​யான குற்​றச்​சாட்டு என்​றால், மனு​தா​ரர் வழக்​கு தொடர்ந்​திருக்க மாட்டார். சிசிடிவி ஆதா​ரங்கள் உள்​ளன.எனவே, உதவி ஆய்​வாளர் மீதான மனு​தா​ரரின் குற்​றச்​சாட்டு தொடர்​பாக டிஎஸ்பி தலை​மை​யில் நேர்​மை​யான விசா​ரணை நடத்த வேண்​டும். குற்​றச்​சாட்டு உறு​தி​யா​னால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். நடை​பாதைக் கடைகளுக்கு முறை​யாக உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளதா என்​பது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்தரவிட்​டார்​.