
புதுடெல்லி, பிப். 24- ஜம்முவின் கீஷ்த்வார் பகுதியில் நேற்று முன்தினம், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கி குரைத்துள்ளது. இதையடுத்து, டைசனை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்தம் கொட்டியபோதும் டைசன் தொடர்ந்து குரைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தொடங்கிய நடவடிக்கையில் 3 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த நடவடிக்கையின் நாயகனாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், காயமடைந்த டைசனுக்கு உதம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டைசனைப் போல், பல மோப்ப நாய்கள் தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் உதவி உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டில் காஷ்மீரின் அக்னூர் செக்டரில் ’பாண்டம்’ எனும் மோப்ப நாய் காணாமல் போனது. 4 தினங்களுக்கு பின் திரும்பியப் பாண்டம், தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தது. பிறகு அங்கு பாதுகாப்புப் படையினர் சென்று தீவிரவாதிகளைக் சுட்டு வீழ்த்தினர்


















