Home செய்திகள் உலக செய்திகள் கமேனி கொல்லப்பட்டார்

கமேனி கொல்லப்பட்டார்

டெஹ்ரான்: மார்ச் 1-
ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த நிலையில் ஈரான் நாட்டு அரசும் இதனை உறுதி செய்திருக்கிறது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீரென ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளையும் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பல இடங்களில் சரமாரியாக குண்டுகளை வீசின. பதிலுக்கு ஈரானும் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது. இந்த சூழலில் ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் நாட்டு செய்தி நிறுவனம் அறிவித்தது.
அதிபர் டிரம்பும், பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றும் வரலாற்றிலேயே மிக மோசமான மனிதராக கருதப்படும் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார் என்றும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சூழலில் ஈரான் நாட்டு அரசின் செய்தி ஊடகம் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணி அளவில் ஈரான் நாட்டு செய்தி தொலைகாட்சிகளில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தகவல் பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பபட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு பொது விடுமுறை இருக்கும் என்றும் 40 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஃபார் நியூஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டு இருக்கிறது. கமேனியின் மரணத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை சூளுரைத்துள்ளது.
இதனால் ஈரானில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 1989 ஆம் ஆண்டு முதல் ஈரான் நாட்டு தலைவராக செயல்பட்டு வந்தவர் அயத்துல்லா அலி கமேனி. நீண்ட காலம் ஈரானை ஆட்சி செய்து வரக்கூடியவராகவும், இந்த பிராந்தியத்தின் ஆதிக்கம் மிக்க மத தலைவராகவும் அவர் திகழ்ந்து வந்தார். அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். பல ஆண்டுகளாக அவரை குறி வைத்து திட்டமிட்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் அவரை கொலை செய்துள்ளன.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கமேனி. அமெரிக்காவின் மிரட்டலுக்கும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சாதவர். ஆனால் இந்த முறை அவர் சற்றே அசந்திருந்த சூழலை பயன்படுத்தி இரு நாடுகளும் கூட்டு சதி செய்து தாக்குதலை நடத்தி முடித்திருக்கின்றன. இந்த முறை இரு நாடுகளுமே அயத்துல்லா அலி கமேனியை குறி வைத்து தான் தாக்குதல்களையே தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் தொழில்நுட்பம் கொண்டு அயத்துல்லா அலி கமேனியின் ஒவ்வொரு நகர்வையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் உளவு பார்த்துள்ளன. அவர் எங்கு செல்கிறார், யாரை சந்திக்கிறார், எந்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார் என்பதை எல்லாம் துல்லியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
முதலில் டெஹ்ரான் மற்றும் பல்வேறு இடங்களிலும் 500 தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் அமெரிக்காவும் கை கோர்த்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து கமேனி நாட்டின் உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் அதன் பின் பதுங்கு குழியில் சென்று தப்பித்து கொள்வார் என அறிந்த அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கமேனியின் ஒவ்வொரு நகர்வையும் நொடிக்கு நொடி கண்காணித்துள்ளன. அப்படி தான் டெஹ்ரானில் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது குண்டுவீசி தாக்கியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கமேனி மட்டும் இல்லாமல் நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷங்கானி மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கமாண்டர் முகமது பக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு செய்தி தெரிவிக்கிறது. முதலில் கமேனி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலிலாரி ஜானியை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் ஷங்கானி மற்றும் கமாண்டர் முகமதுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் தான் தாக்குதல் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.
அவர் பதுங்கு குழிக்குள் செல்வதற்குள் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதால் அமெரிக்க , இஸ்ரேல் படைகள் டெஹ்ரானில் அயத்துல்லா அலி கமேனியின் அலுவலகத்தை குறி வைத்து தயாராக இருந்துள்ளன. அவர் உள்ளே இருப்பது உறுதியான உடன் தாக்குதலை நடத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Highly sophisticated tracking system மூலம் கமேனியை கண்காணித்தோம் என டிரம்பே கூறியுள்ளார். இது தவிர கமேனியின் குடும்ப உறுப்பினர்களை குறி வைத்தும் இஸ்ரேல் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. டெஹ்ரானில் ஒரு இடத்தில் கமேனியின் மருமகன் மறைந்திருந்ததாக்வும் அங்கே கிட்டத்தட்ட 30 குண்டுகள் வீசி அவரையும் கொலை செய்ததாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.