
கொல்கத்தா, மார்ச் 2- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் நேற்று மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட் செய்தது.
கேப்டன் ஷாய் ஹோப்புடன், ராஸ்டன் சேஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்த ராஸ்டன் சேஸ் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 5-வது ஓவரின் 5-வது பந்தை ராஸ்டன் சேஸ் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை அவர், கவர் திசையில் தூக்கி அடித்த போது எளிதான கேட்ச்சை அபிஷேக் சர்மா தவறவிட்டார். பவர்பிளேவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் சேர்த்தது. சீராக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். ஷாய் ஹோப் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் ஜோடி 8.5 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் மட்டையை சுழற்றினார். ஹர்திக் பாண்டியா வீசிய 10-வது ஓவரில் ஷிம்ரன் ஹட்மயர் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்ட இந்த ஓவரில் 17 ரன்கள் குவிக்கப்பட்டன. 12-வது ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.


















