
டெஹ்ரான்: மார்ச் 4-
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்கள், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை, பதிலடி என்கிற பெயரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்கள் ஆகியவை மேற்கு ஆசியப் பிராந்தியத்தை அதிரவைத்திருக்கின்றன.
கடந்த எட்டு மாதங்களில் இரண்டாவது முறையாக ஈரான் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்னும் கவலை எழுந்திருக்கிறது. ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக அந்நாட்டுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது.
ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று ஜனநாயகக் கட்சியினரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஈரான் அணு ஆயுதத்தையும் ஏவுகணைகளையும் தயாரிப்பதைத் தடுப்பதுதான் நோக்கம் என டிரம்ப் அளித்திருக்கும் விளக்கமும் பலவீனமானது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இயற்கை யுரேனியத்துக்கு நிகராக நீர்த்துப்போகவைக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதான முயற்சியில் ஈடுபட்ட ஓமன் சுட்டிக்காட்டியிருக்கிறது. உச்சத் தலைவரையே இழந்துவிட்ட நிலையில், கட்டுப்பாடற்ற நிலைக்குச் சென்றிருக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது மட்டுமல்லாமல் ஹோட்டல்கள்,
தூதரகங்கள் உள்ளிட்ட பிற கட்டிடங்களையும் தாக்கிவருகிறது; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான முதன்மை வழியான ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி பயங்கரவாத அமைப்பு செங்கடல் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கிறது. செங்கடல் வழியாக இந்தியாவின் 50% ஏற்றுமதி நடந்துவருகிறது; கச்சா எண்ணெய், புதைபடிவ எரிபொருள்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருள்கள் செங்கடல் வழியாகத்தான் இந்தியாவுக்கு வருகின்றன. ஏராளமான விமானங்கள் ரத்து, வான் எல்லை மூடல் என மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. சீனா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற சில நாடுகளே அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்திருக்கின்றன.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் இப்பிரச்சினை தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.
இந்தப் பிரச்சினை தொடர உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போர்கள் அழிவைத் தவிர வேறு எந்த நன்மையையும் மனிதகுலத்துக்குத் தராது என்பதை அனைவரும் உணர வேண்டும்!















