
தெஹ்ரான்: மார்ச் 4-
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான நடான்ஸ் அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டதாக பரவும் தகவலால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு வெளியிட்ட தகவலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஈரான் முழுவதும் 153 நகரங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இன்று (மார்ச் 3) ஈரானின் நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் (FEP) நுழைவு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சில சேதங்கள் ஏற்பட்டதாக கூறியது. ஆனாலும், நடான்ஸ் ஆலையில் கதிரியக்க விளைவுகளோ அல்லது வேறு ஏதும் தாக்கமோ கண்டறியப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அப்பகுதியில் பதற்றம் மேலோங்கியுள்ளது.ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இன்று புதிய அலைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சிக்கித் தவிக்கும் பயணிகளை திரும்ப அழைத்து வருவதற்காக இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களும் வளைகுடா நாடுகளான மஸ்கட், ஓமன், ஜெட்டா உள்ளிட்ட நாடுகளுக்கான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
துபாய் மற்றும் அபுதாபி விமான நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதாக அறிவித்தன.நான்காவது நாளாகப் போர் நடந்து வரும் நிலையில், இன்று (மார்ச் 3) இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்தச் சூழலில், இஸ்ரேல் ராணுவம் இன்று ஈரானின் அதிபர் அலுவலகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கூறியது.

















