
கோவை: மார்ச் 9-
வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. இங்குள்ள 7வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர். தமிழ்நாட்டிலேயே மிகவும் கடினமான மலைப்பாதையை கொண்டுள்ள மலை இது.
6 கி.மீ பயண தூரத்தில் கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலையின் உச்சியை அடையலாம். இந்த ஏழு மலைகளில் 7ஆவது மலை தான் மிக கடினமான பயணத்தை கொண்டதாக இருக்கும். வெள்ளியங்கிரி மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி தருகின்றனர். கோடை காலத்திற்குப் பின்பு இந்த மலையில் பனி அதிகமாக இருக்கும். எனவே, அப்போது பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. 7 மலைகளை கொண்ட வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குழுவாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். முழு உடல் பரிசோதனை செய்து மலை ஏற வேண்டும். 6-வது மலையில் வனத்துறை சார்பில் தற்காலிக முகாம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. டிரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.




















