Home செய்திகள் தேசிய செய்திகள் ஜனாதிபதிக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

ஜனாதிபதிக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மார்ச் 9-
மேற்கு வங்கத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முறைப்படி வரவேற்காமல் அவமதிப்பு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி அடுத்த பிதான் நகரில் 9-வது சந்தாலி பழங்குடியினர் சர்வதேச மாநாடு கடந்த 7-ம் தேதி நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநில அரசு திடீரென கோசாய்பூருக்கு மாநாட்டை மாற்றியது.
இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்பதற்காக பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். மரபுப்படி, குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வரோ, அமைச்சரோ வரவேண்டும். ஆனால், முர்முவை வரவேற்க சிலிகுரி மேயர் கவுதம் தேவ் மட்டுமே வந்திருந்தார். இந்த சூழலில், மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, ‘‘முதல்வர் மம்தா பானர்ஜிஎன் மீது அதிருப்தியில் இருக்கிறாரா?’’ என்று வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையின்போது நடந்த மரபு மீறல் தொடர்பாக மேற்கு வங்க மாநில தலைமைச்செயலர் நந்தினி சக்ரவர்த்தியிடம் மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன் அறிக்கைகோரியுள்ளார். குடியரசுத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி ஏன் வரவில்லை?
குடியரசுத் தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாமல் போனது ஏன்? பயணப் பாதையில் குப்பை குவிந்து கிடந்தது ஏன்? இதற்குப் பொறுப்பான டார்ஜிலிங் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், சிலிகுரி காவல் ஆணையர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.