
புதுடெல்லி: மார்ச் 11-
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்துமத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது: கோயில்களின் நகரமான மதுரையில் விமான நிலையம் செயல்படுகிறது. இது தமிழகத்தின் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். சுற்றுலா, ஆன்மிக யாத்திரைகளுக்கு மதுரை விமான நிலையம் மிக முக்கிய இணைப்பாக விளங்குகிறது.
பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிராந்திய வர்த்தகமும் கணிசமாக அதிகரிக்கும்.
சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்தகைய பெருமைமிக்க மதுரையில் உள்ள விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு உலக வரைபடத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழக விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களில் புதிய முனையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இலங்கை தலைநகர் கொழும்பு, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி, துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் மதுரையில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும். விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



















