
தெஹ்ரான்: மார்ச் 12-
பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று ஈரானில் தொடங்கிய போர் 13வது நாளாக நீடிக்கிறது. திடீரென அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஈரான் பதில் தாக்குதலை தீவிர படுத்தியிருக்கிறது.
தொடர்ச்சியாக இஸ்ரேல் மீதும் அண்டை நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்க கட்டடங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருக்கிறது. ஈரான் போர் உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. ஏனெனில் உலகம் முழுவதுமே தற்போது பெரிய அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஆசிய நாடுகளில் நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவில் கடுமையாக எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. லட்சக்கணக்கான பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் எப்போதுதான் இந்த போர் முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானில் இனி தாக்குவதற்கு ஒன்றுமில்லை என்ற ஒரு கருத்தினை வெளியிட்டு இருந்தார். எனவே போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தயாராகி வருவதாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான் ஈரான் நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மூன்று முக்கியமான கண்டிஷன்களை போட்டிருக்கிறது. ஈரான் அதிபர் மசௌத் பெசஸ்கியான் தன்னுடைய எக்ஸ் பக்கத்திலேயே இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஈரானின் விருப்பம் எனக் கூறியிருக்கும் அவர் ரஷ்ய மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் நான் பேசினேன் இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் ஈரான் உறுதிப்பட இருப்பதை தெரிவித்தேன் என கூறியுள்ளார்.
யூதர்களாலும் அமெரிக்காவாலும் தூண்டப்பட்ட இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் அதற்கான மூன்று நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளார். இதன்படி ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் இருக்காது என்பதற்கான சர்வதேச அளவிலான உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேறும் பட்சத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். ஈரான் போரால் உலகம் முழுவதுமே எரிபொருள் பிரச்சினை ஏற்பட தொடங்கி இருப்பதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் தற்காலிகமாக போரை நிறுத்தும் முடிவுக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பின்னர் பெரிய ஆட்சி மாற்றம் நிகழும் என அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. எனவே பல்வேறு நிபந்தனைகளுடன் போரை நிறுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்திருப்பதால் அடுத்தடுத்த நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன.




















