
புதுடெல்லி: மார்ச் 14-
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஈரான் அதிபருடன் பிரதமர் மோடியும் அமைச்சர் ஜெய்சங்கரும் அமைதிப் பேச்சு நடத்தியது வரவேற்கத்தக்கது.
உலக நன்மைக்காக இந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும். இதுதொடர்பான அமைதிக் குரல் கொடுப்பதில் நாம் முதலாவதாக வழிநடத்த வேண்டும். அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் முதலில் தாக்குதலை தொடங்கி வைத்தன. புத்தரும் காந்தியும் பிறந்த நமது இந்திய மண், அமைதி, அகிம்சையை மிகப்பெரிய மரபாகக் கொண்டுள்ளது. அந்த மரபில்தான் நாம் நிற்க வேண்டும். இவ்வாறு சசி தரூர் எம்.பி. கூறினார்.

















