
மும்பை, மார்ச் 16- சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்தார். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. டி20 உலகக் கோப்பையின் கடைசி 3 போட்டிகளில் இந்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதங்களை விளாசினார். முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனை, கவுதம் கம்பீர் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கவுதம் கம்பீர் கூறியதாவது: தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மிகவும் திறமை வாய்ந்தவர். அதிரடி ஆட்டத்தால், ஆட்டத்தின் போக்கையை மாற்றக்கூடியவர். சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். அவரது திறமை மீது ஒருபோதும் எனக்கு எந்த வொரு சந்தேகமும் இருந்ததில்லை. அவர் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும். அந்த அளவுக்கு அசாத்திய திறமையையும், மன உறுதியையும் படைத்தவர் அவர். உடற்பயிற்சி கூடத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொள்வோம். அப்போது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்பதை சஞ்சு சாம்சனிடம் கூறினேன். எங்களுக்கு இடையேயான உரையாடல் இவ்வாறுதான் இருக்கும். டாப் ஆர்டரில் மூன்று இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து நிறைய விமர்சனங்கள் இருந்தது எனக்குத் தெரியும். ஆனால், டாப் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யவில்லை. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷானை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல் என பேட்டிங் வரிசை பலமாக இருப்பதால் நமக்கு அதிக வாய்ப்பு இருந்தது. அதிரடியாக விளையாடக் கூடிய பார்ட்னர்ஷிப் அமையவேண்டும் என்பதற்காகவே டாப் ஆர்டரில் மாற்றம் செய்தோம். முதல் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காகவே சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.



















