
தெஹ்ரான்: மார்ச் 17 –
ஈரானில் மூன்றாவது வாரமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எந்த ஒரு சரக்கு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வெளியே வர இயலவில்லை. இதனால் பல்வேறு நாடுகளிலும் கச்சா எண்ணெய் , எல்பிஜி மற்றும் உரங்கள் என பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இது மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்க தொடங்கி இருக்கிறது.இந்தியாவில் கூட எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன, தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது உணவகங்கள் மூடப்பட்டுவருகின்றன, டீ, காபி உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இந்த சூழலில் தான் ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்திருக்கிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீரென ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை தொடுத்தன. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்த தொடங்கியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால் ஈரான் நாட்டு ராணுவம் கடுமையாக கோபம் அடைந்து அண்டை நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று கூட துபாய் விமான நிலையத்தின் மீது திடீரென ஈரான் தாக்குதல் நடத்தியது. மேற்காசியாவில் நடக்கக்கூடிய இந்த போர் உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. மூன்றாவது வாரத்தையும் கடந்து போர் நீடித்தால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதிபர் மாளிகையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரான் போர் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்ட போது இந்த போர் நீண்ட காலம் நீடிக்காது என்றார். போர் முடிந்தால் உலகம் மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக மாறும் விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.போரால் பங்குச்சந்தைகள் சரிவடைகின்றன அது எனக்கு தெரிகிறது ஆனால் இது ஒரு சதுரங்க விளையாட்டு இதில் நாம் ஸ்மார்ட்டான வீரர்களுடன் விளையாட வேண்டி இருக்கிறது என கூறினார். முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தி வழியே சரக்கு கப்பல்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால் உலக நாடுகள் தங்களுடைய போர்க்கப்பல்களை அனுப்பி அங்கே பாதுகாப்பு தர வேண்டும் என டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் டிரம்பின் அழைப்பை அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை நிராகரித்து விட்டன.இதற்கு இடையே டிரம்ப் மற்றும் சீனா அதிபர் ஸீ ஜின்பிங் இடையிலான சந்திப்பு ஒரு மாத காலம் தள்ளி போகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது போர் நடந்து வருவதால் தான் அமெரிக்காவில் இருப்பது தான் சரியாக இருக்கும் என்பதால் சீன அதிபர் உடனான சந்திப்பை ஒரு மாத காலம் தள்ளி போடுவதாக அவர் கூறியுள்ளார்.



















