
சென்னை : மார்ச் 20 –
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. திமுக கூட்டணியில் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், முதல் நபராக பிரச்சாரத்தை தொடங்கி,தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 3 கட்டமாக வாக்குறுதிகளையும் அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்காமலே இருந்தார்.
அதிமுகவில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மகளிர்அணி செயலாளர் பா.வளர்மதி ஆகிய 4 பேர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்தார். அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.
ஏற்கெனவே மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும், டெல்லியில் இம்மாதம் முதல் வாரத்தில் அமித் ஷாவை சந்தித்தபோதும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து உத்தேசமாக மட்டுமே விவாதிக்கப்பட்டது. ‘பாஜக, அமமுக அதிக தொகுதிகள் கேட்கின்றன.
அதன் காரணமாகவே, தொகுதிப் பங்கீட்டை பழனிசாமி இறுதி செய்யாமல் உள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அவசரம் காட்டாமல் இருக்கிறார்’ என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், வேட்புமனு தாக்கல் 30-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், கடைசி நேர அவசரத்தை தவிர்க்கும் விதமாக,தொகுதிப் பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய வேண்டும் என்று பழனிசாமியிடம் பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளது.


















