Home செய்திகள் உலக செய்திகள் 2,500 கடற்படை வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

2,500 கடற்படை வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

துபாய், மார்ச் 21 – ஈரான் மீதான் இஸ்ரேல், அமெரிக்க படைகளின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானில் இருந்து வந்த 2 டிரோன்கள் நடத்திய தாக்குதலில் குவைத் எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்தது. ஒரு நாளைக்கு சுமார் 7,30,000 பீப்பாய் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த சுத்திகரிப்பு நிலையம், பலத்த சேதம் அடைந்தது.கடந்த புதன்கிழமையன்று பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் மிகப்பெரிய தெற்கு பார்ஸ் கடல் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் குண்டு வீசியதைத் தொடர்ந்து, வளைகுடா அரபு நாடுகளில் உள்ள எரிசக்தி தளங்கள் மீதான தனது தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானிய ஏவுகணைகள் வருவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஜெருசலேமிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துபாய் நகரின் மீது ஈரானில் இருந்து வீசப்பட்ட ஆரம்பகட்டத் தாக்குதல்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்தன. இருப்பினும் அங்கு பலத்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. புனித முஸ்லிம் நோன்பு மாதமான ரமலானின் முடிவைக் குறிக்கும் ஈத் அல்-பித்ர் பண்டிகையை மக்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். மேலும் மசூதிகளில் அன்றைய முதல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஏவுகணையை தடுத்ததால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. பஹ்ரைனில் உள்ள எண்ணெய் கிடங்கும் ஈரான் டிரோன்களால் தாக்கப்பட்டது. இதனால் அந்த எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்தது. சவுதி எண்ணெய் கிடங்கை குறிவைத்து வந்த ஈரான் நாட்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.