
சென்னை: மார்ச் 21 –
கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னையில் குழந்தைகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக கிண்டி சிறுவர் பூங்கா இருந்து வருகிறது. இதில் நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும் பார்வையிட வருகின்றனர்.
சென்னை அடையாரில் அண்மையில் காகங்கள் அதிக அளவில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில் பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதிசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகளை மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறை, பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். அதன் பிறகு சென்னையில் ஒரே நேரத்தில் அதிக அளவில் பறவைகள் இறப்பு இல்லை.
இந்நிலையில் கிண்டி சிறுவர் பூங்காவில் சில பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக அப்பூங்கா மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா உடனடியாகவும் அடுத்த அறிவிப்பு வரும் வரையும் பொதுமக்கள் வருகைக்கு மூடப்படுகிறது.
இப்பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநிலப் பறவைகள் கூண்டில் சில பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பூங்கா தற்காலிகமாக முடப்படுகிறது.
இந்திய அரசால் வெளியிடப்பட்ட “பறவைக் காய்ச்சல் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைத் திட்டம் (திருத்தம் 2021)” வழிகாட்டுதல்கள், முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகள் ஆகியவை துறையின் மூலம் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
















