
புதுடெல்லி, மார்ச் 21 – அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அலுவலகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
மனித நேயத்தின் அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருகிறது. நமது இந்து மதம், ஒற்றுமை, மனித நேயம், சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. தற்போது மேற்கு ஆசியாவில் (அமெரிக்கா – ஈரான்) போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்த போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று பல்வேறு நாடுகள் உறுதியாக நம்புகின்றன. இதுதான் இந்தியாவின் பலம். உலகம் முழுவதும் பல்வேறு போர்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தியா எப்போதும் நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது. மனிதநேய சட்டத்தை இந்திய மக்கள் பின்பற்றுகின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் காட்டாட்சி சட்டத்தை பின்பற்றி வருகின்றன.
சுயநலம், ஆதிக்க மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியாவின் கொள்கையை உலக நாடுகள் பின்பற்றினால் அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதாக தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் பேசினார். மராத்தி நாளிதழுக்கு மோகன் பாகவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு 46 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 86 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எங்களது செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவும், நட்புறவை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம். எங்கள் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் நாங்கள் கால் பதித்து உள்ளோம். ஏராளமான யூடியூபர்கள், சமூக வலைதள பிரபலங்களுடன் தொடர்பில் உள்ளோம். சமூக வலைதளங்கள் வாயிலாக எங்களது கொள்கைகளை மக்களிடம் பரப்பி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

















