
புதுடெல்லி: மார்ச் 24 –
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்திய அரசு ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்தடைந்தன. இந்நிலையில் எரிவாயு ஏற்றப்பட்ட மேலும் 2 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழி யாகப் பயணிக்கின்றன. ஈரான் நாட்டின் ஒப்புதலுடன், அதன் கடற்கரைக்கு மிக நெருக்கமான பாதுகாப்பான பாதையை இக்கப்பல்கள் பின்பற்றுவதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று அதிகாலை, இந்தியக் கொடியுடன் கூடிய ‘ஜக் வசந்த்’ மற்றும் ‘பைன் காஸ்’ ஆகிய இரண்டு மிகப்பெரிய எரிவாயு சுமந்து வரும் கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகக் கரையிலிருந்து ஈரானின் கிஷ்ம் மற்றும் லாரக் தீவுகளை நோக்கி வடக்கு திசையில் பயணித்தன. தங்களின் இலக்கை வெளிப்படையாக அறிவிப்பதற்குப் பதிலாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்கப்பல்கள் ‘இந்திய உரிமையாளர்’ என்ற சிக்னலை மட்டுமே வழங்குகின்றன. இந்தக் கப்பல்கள் நேற்று மாலை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மறுமுனையான ஓமன் வளைகுடாவை வந்தடைந்தன.சாதாரண காலங்களில் ஓமன் கடற்கரைக்கு அருகில் செல்லும் கப்பல்கள், தற்போது ஈரானின் கடற்கரையை ஒட்டியே செல்கின்றன. இது ஈரான் விதித்துள்ள ஒருவித ‘போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை’ உணர்த்துகிறது. ‘ஜக் வசந்த்’ கப்பல் பிப்ரவரி 26-ம் தேதி குவைத்தில் எரிவாயுவை நிரப்பியது. ஆனால், பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதால் அங்கேயே சிக்கிக்கொண்டது. அதேபோல் ‘பைன் காஸ்’ கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ருவைஸ் பகுதியிலிருந்து எரிவாயுவை ஏற்றிக்கொண்டு காத்திருந்தது. இதுகுறித்து சென்டோசா ஷிப் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷிவ் சாம்ராட் கபூர் கூறும்போது, “ஈரான் இந்த ஜலசந்தியை ஒரு கடல்சார் ராஜதந்திரக் கருவியாகப் பயன்படுத்துகிறது.மேற்கத்திய நாடுகளின் ஆதரவா அல்லது எரிசக்தி பாதுகாப்பா என்பதைத் தேர்ந்தெடுக்குமாறு உலக நாடுகளை இது கட்டாயப்படுத்துகிறது.


















