
வாஷிங்டன், மார்ச் 25- ஈரானுடனான போரில் திறம்பட வென்றுவிட்டதாகவும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளின் பங்கை பாராட்டுவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பதற்றத்திற்கு நடுவிலும் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி வந்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ளது. 5 நாட்கள் சண்டை நிறுத்தம் ஈரான் தலைவர் அயேதுல்லா அலி கமேனியை அமெரிக்கா கொன்ற நிலையில், அதற்கு பழி வாங்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. உலகின் மிக முக்கிய வர்த்தக வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.இதனால், சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரிக்க திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களை தாக்குவோம் என்று தெரிவித்தது.



















