
புதுடெல்லி: மார்ச் 25-
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய எரிவாயு (எல்பிஜி) கப்பல்கள், ஜக் லட்கி என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஆகியவை இந்தியா வந்தன. இந்த சூழலில் ஜக் வசந்த், பைன் காஸ் ஆகிய 2 எரிவாயு கப்பல்கள் ஈரான் ராணுவ சிறப்பு அனுமதியுடன் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன. இந்த கப்பல்கள் நேற்று சர்வதேச கடல் எல்லை பகுதியை வந்தடைந்தன. அவற்றுக்கு இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. மார்ச் 26 முதல் 28-ம் தேதிக்குள் இரு எரிவாயு கப்பல்களும் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் ராஜஷ் குமார் சின்ஹா கூறும்போது, “இரு எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த கப்பல்களில் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் இருக்கிறது’’ என்றார்.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை வட்டாரங்கள் கூறியதாவது: சமையல் காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாள்தோறும் உள்நாட்டில் 55,000 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் இருந்து 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. தற்போது மேலும் 2 எரிவாயு கப்பல்கள் விரைவில் இந்தியா வந்து சேர உள்ளன. இவை தவிர நெதர்லாந்தில் இருந்து ஹெலாஸ் கிளாடியேட்டர், அமெரிக்காவில் இருந்து காஸ் ஜுபிட்டர் ஆகிய 2 கப்பல்கள் தலா 24,000 டன் எல்பிஜி காஸுடன் இந்தியா வருகின்றன. இவை வரும் 30-ம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்து சேரும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அடுத்தடுத்து எல்பிஜி காஸ் கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ளன.இதேபோல ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. வளைகுடா பகுதியில் முகாமிட்டுள்ள12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

















