
கோழிக்கோடு், மார்ச் 25- அண்டை மாநிலமான கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நேற்றுடன் (மார்ச் 23) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கேரளாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சுதீசன் கடைசி நாளான நேற்றுதான் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் பரிசீலனை (மார்ச் 24) முடிந்த நிலையில் மார்ச் 26 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.பெறப்பட்ட வேட்புமனுக்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 1,252 வேட்பாளர்கள் மொத்தமாக 2,117 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டதைவிட அதிகமான மனுக்கள் என்பது சுவாரஸ்யத் தகவல். ஒரு சிலர் 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்வதால் வேட்புமனுக்கள் எண்ணிக்கை உயரும். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 33(7)(ஏ)-ன்படி ஒருவர், நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் முடியும், 33(7)(பி)-ன் படி அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் புள்ளி விவரங்களின்படி, இம்முறை கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 141 வேட்பு மனுக்களும், வயநாட்டில் போட்டியிட மிகக் குறைந்தளவிலான வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல். 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் களத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF), பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த மும்முனைப் போட்டி குறித்த கள நிலவரத்தைப் பார்ப்போம். முதலாவதாக ஆளும் இடது ஜனநாயக முன்னணியை (எல்டிஎஃப்) எடுத்துக் கொள்வோம். ஹாட்ரிக் வெற்றியுடன் 3-வது முறையாக கேரள சட்டப்பேரவையைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் (S), தேசிய மதச்சாரபற்ற கூட்டணி, இந்திய சோஷலிஸ்ட் ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு), கேரள காங்கிரஸ் (B) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தக் கூட்டணி. அதன்நிமித்தமாக, ஆளும் எல்டிஎஃப் கூட்டணி கடந்த 10 ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக செய்தவற்றை பட்டியிலிட்டு கூடவே, “எல்டிஎஃப் இல்லாவிட்டால் வேறு யார்?” “mattarund LDF allathe” (Who else but the LDF?) என்ற தலைப்பில் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது. இதில் பிரதானமாக எல்டிஎஃப் முன்வைப்பது மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி. கேஐஐஎஃப்பி (Kerala Infrastructure Investment Fund Board) மூலம் கட்டபட்டுள்ள மேம்பாலங்கள், லைஃப் மிஷன் திட்டம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஆகியனவற்றை சுட்டிக் காட்டுகிறது.

















