
புதுடெல்லி: மார்ச் 26-
ஒரு பக்கம் போர் மேகங்கள், இன்னொரு பக்கம் ஏவுகணைத் தாக்குதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க… சீனா மட்டும் சத்தமே இல்லாமல் தனது பொருளாதார அடித்தளத்தை இரும்புக்கோட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அந்த நாடு கையில் எடுத்திருக்கும் பிரம்மாண்ட ஆயுதம்: தங்கம்! அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில், எதிர்கால நிதி நெருக்கடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘தங்கக் கவசத்தை’ (Gold Shield) மிகத் தீவிரமாகத் தயாரித்து வருகிறது சீனா. சீனாவின் மத்திய வங்கியான பி.பி.ஓ.சி (PBOC), கடந்த 16 மாதங்களாகத் தொடர்ந்து தனது தங்க இருப்பை அதிகரித்து வருவது உலக நிதி நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீன தங்கம் மார்ச் 2026 நிலவரப்படி, சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு 2,309 டன்களாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 387.6 பில்லியன் டாலர்கள்! கடந்த 20 மாதங்களிலேயே சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு இருமடங்காக அதிகரித்திருப்பது, அந்த நாட்டின் நீண்டகாலத் திட்டத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. இது வெறும் முதலீடு மட்டுமல்ல, டாலர் வீழ்ச்சிக்கு எதிரான ஒரு ‘இன்சூரன்ஸ் பாலிசி’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2,309 டன் என்பது வெறும் ‘டிரெய்லர்’ தான், மெயின் பிக்சர் இன்னும் பயங்கரமாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஷாங்காய் தங்கச் சந்தை (Shanghai Gold Exchange), ஹாங்காங் இறக்குமதி மற்றும் ரஷ்யாவுடனான நேரடி ஒப்பந்தங்களைக் கணக்கிட்டால், சீனாவின் உண்மையான தங்க இருப்பு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட 2 முதல் 10 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.


















