Home செய்திகள் உலக செய்திகள் மீண்டும் வேகமாகப் பரவி வரும் சிக்காடா’ கொரோனா வைரஸ்

மீண்டும் வேகமாகப் பரவி வரும் சிக்காடா’ கொரோனா வைரஸ்

வாஷிங்டன்: மார்ச் 27-
ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் ‘சிக்காடா’ கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 75 மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ள இந்த வைரஸ், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மீறித் தாக்கும் தன்மை கொண்டது. இருப்பினும், இது முந்தைய பாதிப்புகளை விடக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் BA.3.2 எனப்படும் புதிய கோவிட்-19 துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் வைரஸின் கிளை வகையாகக் கருதப்படும் இதற்கு, ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உருமாறித் தோன்றியுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சிக்காடா வைரஸ் மற்ற வகைகளை விட அதிகப்படியான மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளதால் மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட மாற்றங்களும், மூல வைரஸுடன் ஒப்பிடும்போது 70-க்கும் மேற்பட்ட மாற்றங்களும் காணப்படுகின்றன. இத்தகைய அதிகப்படியான மாற்றங்கள், தடுப்பூசி அல்லது முந்தைய தொற்றுகள் மூலம் உடலில் உருவான நோய் எதிர்ப்புச் சக்தியை இந்த வைரஸ் ஓரளவுக்கு மீறிச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, டிசம்பர் 2025-இல் இதனை “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” என வகைப்படுத்தியது. இருப்பினும், இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், இது முந்தைய ஓமிக்ரான் வகைகளை விட அதிக பாதிப்பையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்துவதாக தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை. காய்ச்சல், இருமல், சோர்வு மற்றும் தொண்டை வலி போன்ற வழக்கமான கோவிட் அறிகுறிகளே இதற்கும் காணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய உயர்வு ஏதும் ஏற்படவில்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.