
சென்னை: மார்ச் 28 –
முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.இந்த நிலையில், ஆளுங்கட்சியின் அதிகார பலத்துடன் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதற்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணம், விளம்பரம் என்ற கணக்கில் சட்டவிரோதமாக செலவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, “முரசொலி அறக்கட்டளையின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்கெனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தபோது, அவரது தூண்டுதலின்பேரில்தான் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பொய் புகார் அளிக்கப்பட்டது.

















