
பெங்களூரு: மார்ச் 28: நகரத்திலிருந்து திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி தரிசனத்திற்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலையின் பங்காரூ பாளையம் பலமகுலபள்ளி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் 4 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலமனேரிலிருந்து சித்தூருக்கு வந்து கொண்டிருந்த பேருந்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பங்காரூ பாளையம் பலமகுலபள்ளி அருகே நின்றிருந்தது. அப்போது பின்னாலிருந்து வந்து கார் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் தம்பதி மற்றும் குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்தனர், சடலங்கள் காரினுள்ளேயே சிக்கிக்கொண்டன. ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையினர் பெங்களூரைச் சேர்ந்த அந்த தம்பதி பற்றி கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் வசித்து வந்த இந்த குடும்பம், இன்று மதியம் 12 மணிக்கு திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்திற்காக டிக்கெட் பெற்றிருந்தது. ஆனால் இந்தத் துயரச் சம்பவத்தில் அவர்கள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பஸ்ஸில் சிக்கிக்கொண்ட காரை, காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















