
லண்டன், மார்ச் 28- 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரில் விளையாடக் கிடைத்த வாய்ப்பை நிராகரித்து உள்ளனர். இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கில் பணம் கொட்டும் ஐபிஎல் தொடரை விட, தங்கள் நாட்டு உள்ளூர் கிரிக்கெட்டே முக்கியம் என அவர்கள் பிடிவாதம் காட்டி வருகின்றனர். 2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகும் வீரர்களுக்குப் பதிலாக, மாற்று வீரர்களாக விளையாட இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஷ் டங் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் இருவருமே அதிரடியாக நிராகரித்துள்ளனர். அடுத்த 2 மாதங்களை இங்கிலாந்திலேயே கழிக்க விரும்புவதாகவும், கவுண்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் பென் டக்கெட், இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். தனது மனநலம், உடல் தகுதி மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக அவர் கூறினார். ஐபிஎல் தொடரை பாதியில் புறக்கணிக்கும் வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை இருந்தும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர் இந்த முடிவை எடுத்தார். ஹாரி புரூக் வரிசையில் இப்போது பென் டக்கெட்டும் ஐபிஎல் விளையாடத் தடை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் ஐபிஎல் பணத்திற்காக வீரர்கள் ஏங்கிய நிலை மாறி, இப்போது ஏன் அதனை வேண்டாம் என்கிறார்கள்? இதற்குப் பின்னால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) புதிய வியூகம் உள்ளது.



















