Home செய்திகள் தேசிய செய்திகள் மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மீண்டும் மண்ணெண்ணெய் – ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

புதுடெல்லி : மார்ச் 30 –
ஈரானில் ஐந்தாவது வாரமாக போர் நீடிக்கிறது. தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் தொடங்கிய போர் இன்று வரை நாளுக்கு நாள் தீவிரமடைந்த வண்ணமே உள்ளது. போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய், எல்பிஜி வரத்து தடைபட்டுள்ளது.
இந்தியா தனக்கு தேவையான எரிபொருட்களை பெருமளவில் வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. ஆனால் ஒரு மாத காலமாக அது தடைபட்டு நிற்கிறது. வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து வருகிறது. இருந்தாலும் போருக்கு முன்பு இருந்த அளவிலான வரத்தினை எட்ட முடியவில்லை.
அரசு பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல், சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம், சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த வாரம் கூட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இந்த சூழலில் மத்திய அரசு மிக முக்கியமான ஒரு முடிவினை எடுத்திருக்கிறது. இதன்படி அனைத்து பெட்ரோல் நிலையங்கள் வழியாகவும் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வாயிலாக அடுத்த அறுபது நாட்களுக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. குறிப்பிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த விதி பொருந்தும் என தெரிவித்து இருக்கிறது.
பெட்ரோலிய சட்டம் 1934 இன் கீழ் சில தளர்வுகளை வழங்கி இருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான எரிபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய அரசு அனுமதி தந்திருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரா, புதுச்சேரி போன்ற 21 மாநிலங்கள் இந்த பட்டியலில் உள்ளன.