
புதுடெல்லி: மார்ச் 31 –
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை நாளை முதல் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி. கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும். குறிப்பாக ஹிக் விஷன், தகுவா மற்றும் டிபி-லிங்க் போன்ற சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகின்றன.இந்நிலையில், சிசிடிவி கேமராக்களின் பாதுகாப்பு தரத்தை கடுமையாக்குவதற்காக தர பரிசோதனை சான்றிதழ் (எஸ்டிக்யூசி) பெறுவது கட்டாயம் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு நாளை முதல் அமல்படுத்த உள்ளது.சீன தயாரிப்பு சிப்கள் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கு, இந்த விதிமுறைப்படி தரச் சான்றிதழ் மறுக்கப்படும். எஸ்டிக்யூசி ஒப்புதல் இல்லாமல், சிசிடிவி கேமராக்களை இந்திய சந்தையில் விற்பதற்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை சீன தயாரிப்புகளின் விற்பனைக்கு பலத்த அடியாக இருக்கும். இதனால் உள்நாட்டு தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்கும்.
சிபி பிளஸ், க்யூபோ, பிரமா, மேட்ரிக்ஸ் மற்றும் ஸ்பார்ஷ் போன்ற உள்நாட்டு தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள் விற்பனை விரிவடையும். இந்த நிறுவனங்கள் சீனாவின் உதிரி பாகங்களை சார்ந்திருக்காமல், தைவான் சிப்கள் மற்றும் உள்நாட்டு பொருட்களை வாங்கும் நிலை ஏற்படும். சிசிடிவி கேமராக்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்படி தயாரிப்பாளர்கள் முக்கிய பாகங்கள், சிப்கள் எந்த நாட்டில் தயாரானவை என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், அவை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பெறுவது தடுக்கப்படும். புதிய விதிமுறைகளின்படி இதுவரை 500 சிசிடிவி மாடல்களுக்கு பாதுகாப்பு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.


















