Home விளையாட்டு சச்சின் மகன் அர்ஜுனை புறக்கணித்த லக்னோ அணி

சச்சின் மகன் அர்ஜுனை புறக்கணித்த லக்னோ அணி

லக்னோ, ஏப்ரல் 2- சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்து இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இடம் பெற்றாலும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார் அர்ஜுன்.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், லக்னோ அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தான் ஆடிய முதல் போட்டியில் அர்ஜுனுக்கு ஆட வாய்ப்பு தரவில்லை. மேலும், ஐந்து பேர் இடம் பெறும் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் கூட அர்ஜுனை சேர்க்கவில்லை.ஐபிஎல் தொடரில் கடந்த 2021 முதல் 2025 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தார். அங்கு அவருக்கு அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் 2026 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்யப்பட்டார் அர்ஜுன். லக்னோ அணியின் முதல் போட்டிக்கு முன்பு அர்ஜுன் அளித்த பேட்டியில், “ஆடும் லெவனில் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என அனைத்து வீரர்களும் விரும்புவார்கள், ஆனால் தனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அதை சரியாக பயன்படுத்தி அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே தனது தற்போதைய எண்ணம்” என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆல்-ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அர்ஜுனுக்கு இம்பேக்ட் வீரருக்கான வாய்ப்பும் கிடைக்காதது அவருக்கான ஐபிஎல் வாய்ப்பு இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. அர்ஜுன் டெண்டுல்கருக்கு 26 வயது ஆகும் நிலையில் கிரிக்கெட்டில் ஒரு ஏற்றம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் அவரது கிரிக்கெட் வாழ்வு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விடும்.