
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-
கேரளத்தில் மொத்தம் 140 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது.
இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி க்கும் (எல்டிஎஃப்) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎஃப்) இடையே பலத்த போட்டி உள்ளது. அதேநேரம் பாஜகவும் சில தொகுதிகளில் இரு முன்னணி வேட்பாளர்களுக்கும் பலத்த சவாலை அளித்து வருகிறது.
இந்நிலையில் மனோரமா நியூஸ்-சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வடக்கு கேரளத்தில் எல்டிஎஃப் அணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிகிறது. யுடிஎஃப் முன்னணி வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிகிறது.
காசர்கோடு மாவட்டத்திலுள்ள மஞ்சேஷ்வர் தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கடந்த 2021-ல் போட்டியிட்ட சுரேந்திரன், வெறும் 745 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
இம்முறையும் அவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதியில் யுடிஎஃப் அணி வேட்பாளர் ஏகேஎம் அஷ்ரப்(முஸ்லிம் லீக்) வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. காசர்கோடு மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் 2 முதல் 4 தொகுதிகளில் எல்டிஎஃப் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. யுடிஎஃப் அணி ஒன்று முதல் 3 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. என்டிஏ அணிக்கு இங்கு ஒரு சீட் வெல்ல வாய்ப்பு உள்ளது.
கண்ணூர் மாவட்டத்திலுள்ள 11 தொகுதியில் எல்டிஎஃப் அணிக்கு 6 முதல் 8 இடங்களும், யுடிஎஃப் அணிக்கு 3 முதல் 5 இடங்களும் கிடைக்கும். வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளையும் யுடிஎஃப் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் 5 முதல் 7 இடங்களையும், எல்டிஎஃப் 6 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலப்புரத்திலுள்ள 16 தொகுதிகளில் யுடிஎப் 14 முதல் 16 இடங்களையும், எல்டிஎஃப் 2 இடங்களையும் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















