Home செய்திகள் தேசிய செய்திகள் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு:அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்

விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு:அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்

புதுடெல்லி: ஏப்ரல் 2-
தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குளறுபடிகள் நடப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அடுத்ததாக கொளத்தூருக்கு பிரச்சாரத்திற்குச் சென்றார். அப்போது உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், பொதுமக்களின் கூட்ட நெரிசலில் விஜய்யின் வாகனம் நீண்ட நேரம் சிக்கித் தவித்தது. கொளத்தூரில் அனுமதி பெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை போலீஸார் அகற்றியதோடு, மின் இணைப்பையும் துண்டித்தனர்.
பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கான 10 மீட்டர் இடைவெளி எங்கும் கடைபிடிக்கப்படவில்லை. கூட்டம் மிகுந்த பகுதியில் திடீரென அரசுப் பேருந்துகளை அனுமதித்து போலீஸார் செயற்கையான நெரிசலை உருவாக்கினர். இவ்வளவு பெரிய கூட்டத்தை நிர்வகிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. தமிழக காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு விதிகளின்படி விஜய்க்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.