
பெங்களூர் ஏப்ரல் 3- பெங்களூரில் ‘பர்பிள் லைன்’ வழித்தடத்தில் ஏப்ரல் 5ம் தேதி இரண்டு மணிநேரம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அன்றைய தினம் மெட்ரோ ரயில் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை பர்பிள் லைனில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. பெங்களூர் விஜயநகர் மெட்ரோ நிலையம் மற்றும் அத்திகுப்பே மெட்ரோ ரயில் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணியின் காரணமாக நாடபிரபு கெம்பேகவுடா நிலையம் (மெஜஸ்டிக்) மற்றும் மைசூரு சாலை மெட்ரோ நிலையம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு மணி நேரம் முழுமையாக நிறுத்தப்படும். இதனால் இந்த நேரத்தில் பயணிகள் தங்களின் பயண திட்டத்தை முன்கூட்டியே மாற்றி கொள்ள வேண்டும். பிறகு காலை 9 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கும். அதேவேளையில் பிற வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் காலை 7:00 மணி முதல் இயங்கும். அதன்படி சல்லகட்டா முதல் மைசூரு சாலை வரையும், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையம் ( மெஜஸ்டிக்) முதல் ஒயிட்பீல்ட் (காடுகோடி) வரையிலும், மாதவரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலும், ஆர்.வி. சாலை முதல் பொம்மசந்திரா வரையிலும் மெட்ரோ ரயில் தொடர்ந்து இயங்கும்’’ என கூறப்பட்டுள்ளது.


















