
சென்னை, ஏப்ரல் 3- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
டாப் ஆர்டர் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். நடுவரிசையில் சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர். 8-வது வீரராக களமிறங்கிய ஜேமி ஓவர்டன் 43 ரன்கள் சேர்த்ததன் காரணமாக சிஎஸ்கே அணியால் அந்த ஆட்டத்தில் 100 ரன்களை கடக்க முடிந்தது. பந்துவீச்சிலும் சிஎஸ்கே அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. ராஜஸ்தான் அணியின் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது தாக்குதல் ஆட்டத்தால் மேட் ஹென்றி, கலீல் அகமது, நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன் ஆகியோரை உள்ளடக்கிய ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் பந்துவீச்சையும் கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும். சேப்பாக்கம் ஆடுகளம் கடந்த மாதம் நிறைவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரின் போது முற்றிலும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது.
அதேவளையில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. இதே நிலையே தற்போதும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















