
சென்னை, ஏப்ரல் 3- ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியையொட்டி சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: ஆடுகளங்களைப் பொறுத்தவரை, இங்கு வானிலை தான் பெரிய காரணியாக இருக்கும். சேப்பாக்கத்தில் டி 20 உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றன. அப்போது பனிப்பொழிவு பெரிய அளவில் இருக்கவில்லை. சிறந்த வானிலை மற்றும் நல்ல சூழல் இருக்கும்போது, பொதுவாக சென்னை ஆடுகளம் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால், இரவு நேரங்களில் சில சமயங்களில் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருந்தால், அது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடும். குறிப்பாக போட்டியின் இரண்டாம் பாதியில் மாற்றம் இருக்கும். எனவே, இந்த ஆண்டு ஆடுகளம் எப்படிச் செயல்படும் என்பது குறித்துத் துல்லியமாகச் சொல்ல முடியாது. போட்டியின் போது நிலவும் சூழலுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு, அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேப்பாக்கத்தில் 7 ஆட்டங்களில் விளையாடுகிறோம். எனவே, ஆடுகளம் எப்படியிருந்தாலும், அதை சாதகமாக எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முயற்சிப்போம். எங்களிடம் உள்ள வீரர்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. கார்த்திக் சர்மா சிக்ஸர் அடிப்பதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர். வலது கை பேட்டர்களில் அவரைப் போல சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்டவர்களை நான் அதிகம் பார்த்ததில்லை. அதேபோல், மிகச்சிறந்த டி 20 சாதனைகளைக் கொண்டுள்ள உர்வில் படேல் உள்ளார். சர்ஃபராஸ் கான் சமீபகாலமாக டி20 போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இளம் வீரரான பிரசாந்த் வீரிடம் அபாரமான திறமைகள் உள்ளன. எனவே, அணியில் திறமைக்கு எந்தக் குறையும் இல்லை. ஐபிஎல்-ஐ பொறுத்தவரை குடும்பத்தினர், ஊடகங்கள், அணி வீரர்கள் என அனைவரிடமிருந்தும் மிகப்பெரிய அழுத்தம் இருக்கும். அதைச் சமாளித்து சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு சற்று காலம் எடுக்கும். அவர்களுக்கு அந்த நேரத்தைக் கொடுப்பதுதான் முக்கியம். எங்களது பேட்டிங் வரிசை ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கும்போது மற்றவர்கள் வியந்து பார்க்கும் அணியாக மாறும். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.





















