
லக்னோ, ஏப்ரல் 3- நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான கள உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நிலையில் இருந்து சமீர் ரிஸ்வி மற்றும் ஸ்டப்ஸ் இணைந்து டெல்லி அணியை வெற்றி பெற செய்தனர். இந்த ஆட்டத்துக்கு பிறகு லக்னோ கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆகியோர் களத்தில் நின்றபடி பேசினர். அவர்களுக்கு இடையிலான உரையாடல் தீவிரமானதாக இருந்தது.
இதையடுத்து கடந்த 2024 சீசனில் லக்னோ அணி, ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததும் களத்திலேயே அப்போதைய கேப்டன் கே.எல்.ராகுலிடம் சஞ்சீவ் கோயங்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதை மையமாக வைத்து பந்த் – கோயங்கா உரையாடல் குறித்து சமூக வலைதளத்தில் கருத்துகள் வெளியாகின. ‘ஒரு ஆட்டம் தானே’, ‘முதல் போட்டி தானே’ என அந்த போஸ்டுகள் இருந்தன. இந்தச் சூழலில் லக்னோ அணி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளது. “நீங்கள் பார்க்கும் அனைத்தும் அசல் கதை அல்லா. இதோ கேமரா கட் இல்லாத முழு உரையாடல்” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளது. “இதுவொரு நீண்ட சீசன். இது மாதிரியான தருணங்கள் இதன் பகுதிகளில் ஒன்று. நிச்சயம் இது வலுவான கட்டமைப்புக்கு உதவும்.
அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் மீது நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். போட்டியைப் பார்க்க லக்னோ மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வலுவாக மீண்டு வருவோம். இந்த சீசனில் லக்னோ சிறப்பாக செயல்படும்” என இந்த ஆட்டத்துக்கு பிறகு சஞ்சீவ் கோயங்கா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் அதையும் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர்.




















