
சென்னை, ஏப்ரல் 4- ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சஞ்சு சாம்சன் 7 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் சேவியர் பார்ட்லெட் பந்தில் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மட்டையை சுழற்றினார். சேவியர் பார்ட்லெட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் விரட்டினார். அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 29 பந்துகளில், சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். ஆயுஷ் மாத்ரே அதிரடியால் சிஎஸ்கே அணி 10 ஓவர்களில் 101 ரன்களை குவித்தது. மறுபுறம் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக பேட் செய்து வந்த ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் விஜயகுமார் வைஷாக் பந்தில் ஷார்ட் தேர்டுமேன் திசையில் நின்ற யுவேந்திர சாஹலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் களமிறங்கிய கார்த்திக் சர்மா 1 ரன்னில் மார்கோ யான்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து களமிறங்கிய சர்ஃபராஸ் கான் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். அர்ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரில் சர்ஃபராஸ் கான் 3 பவுண்டரிகளை விளாசினார்.





















