
சென்னை, ஏப்ரல் 4- 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றாலும், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த ஒரு முடிவு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் வீசிய 3 ஓவர்களில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட சென்னை பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியவில்லை. 21 ரன்கள் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். ஆனால் அவருக்கு 4வது ஓவர் வழங்கப்படவில்லை.இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காத ஒரே பந்துவீச்சாளர் சாஹல் தான். அவருக்கு ஏன் முழுமையாக 4 ஓவர்கள் வழங்கப்படவில்லை? சிவம் துபே களத்தில் இருந்தார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கௌஹாத்தியில் ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் துபேயை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தியதால் ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சனை ஏற்பட்டு, கடைசி 2 ஓவர்களில் ஒரு ஃபீல்டரை உள்வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று விமர்சித்துள்ளார். புள்ளிவிவரங்களின்படி, ஐபிஎல் தொடரில் சிவம் துபே சாஹல் பந்துவீச்சில் இதுவரை ஆட்டமிழந்தது இல்லை. அவர் சாஹல் பந்துவீச்சில் 20 பந்துகளில் 23 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சாஹலின் எகானமி 9.03 ஆக உள்ளது. வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அது 7.31 ஆக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே ஸ்ரேயாஸ் ஐயர் இடது கை பேட்ஸ்மேன்களான துபே மற்றும் சர்பராஸ் கான் களத்தில் இருந்தபோது சாஹலுக்கு ஓவர் வழங்கவில்லை எனத் தெரிகிறது





















