
புதுடெல்லி: ஏப்ரல் 6
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட கடந்த 2018ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 66 மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு கடந்த மாதம் 16ம் தேதி விசாரித்தது.
அப்போது மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தீர்ப்பை எதிர்க்கும் தரப்பினர் வாதங்கள் ஏப்ரல் 7, 8 தேதிகளிலும், தீர்ப்புக்கு ஆதரவான மனுதாரர்களின் வாதங்கள் ஏப்ரல் 14, 16 தேதிகளிலும் கேட்கப்படும். பின்னர் இரு தரப்பிலும் விளக்க வாதங்கள் ஏப்ரல் 21ம் தேதி கேட்கப்பட்டு, ஏப்ரல் 22ம் தேதி விசாரணை நிறைவு பெறும்.
மறுஆய்வு மனுதாரர்கள் சார்பில் ஒருங்கிணைப்பு வழக்கறிஞராகக் கிருஷ்ணகுமார் சிங்கையும், மறுஆய்வு மனுக்களை எதிர்ப்போர் தரப்பில் ஒருங்கிணைப்பு வழக்கறிஞராக ஷாஷ்வதி பரியும் நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் கே.பரமேஷ்வர், சிவம் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாகரத்தினா, எம்.எம். சுந்தரேஷ், ஏ.அமானுல்லா, அரவிந்த் குமார், ஏ.ஜி.மசி, பிபி வர்லே, ஆர் மகாதேவன், ஜோய்மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நாளை முதல் விசாரிக்கிறது.


















