Home மாவட்டங்கள் திருவண்ணமாலை திருவண்ணாமலையில் விபத்து பெண் உள்பட இருவர் பலி

திருவண்ணாமலையில் விபத்து பெண் உள்பட இருவர் பலி

திருவண்ணாமலை: ஏப்ரல் 6 –
திருவண்ணாமலையில் தனது நண்பர்களுடன் கிரிவலம் முடித்து வீடு திரும்பும் போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கார் புளிய மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஒரு இளைஞர் உள்பட இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூர் பத்மா நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்(26), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த மோனீஷ்குமார்(24), சஞ்சய்குமார்(23), மதுமிதா(28), குணலட்சுமி(24), காயத்ரி(24) ஆகிய 5 நபர்களுடன் நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு காரில் வந்துள்ளனர்.
காரை மோனீஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு கிரிவலம் முடித்துவிட்டு அதிகாலை சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த கொண்டம் பகுதி அருகே சென்ற போது கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையோரம் இடது பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் கார் ஓட்டுநர் மோனீஷ்குமார் காரிலேயே சிக்கிக் கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசபாக்கம் காவல் துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் கட்டர் மெஷின் உதவியுடன் சீட்டின் அடிபாகத்தை கட்டு செய்தனர். பின்னர் பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மோனீஷ் குமாரை மீட்டுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த சஞ்சய்குமார், மதுமிதா, குணலட்சுமி, காயத்ரி ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுமிதா(28) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 4 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.