
பெங்களூரு: ஏப்ரல் 6 – வாகனங்களுக்கு
எல்பிஜி பற்றாக்குறையால் சிரமங்களைச் சந்தித்து வரும் ஆட்டோ டிரைவர்கள், இன்று உணவுத்துறை அமைச்சர் கே.எச். முனியப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ எல்பிஜி பிரச்சினைக்கு இந்த மாதம் 10ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் கே.எச். முனியப்பா ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பெங்களூரு, சஞ்சய் நகரில் உள்ள உணவுத்துறை அமைச்சர் முனியப்பனின் இல்லத்திற்கு, அமைதி வாகன சங்கம், டாக்டர் அம்பேத்கர் வாகன ஓட்டுநர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆட்டோ டிரைவர்கள் இன்று ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அமைப்புகளைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள், வாகன எல்பிஜி பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரினர்.
வாகன எரிபொருள் பற்றாக்குறையால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். தனியார் எரிபொருள் நிலையங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.
இந்த மாதம் 10ஆம் தேதி அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். உங்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். தனியார் பங்குகளின் உரிமையாளர்களிடம் பேசி, அதிக விலை வசூலிக்க வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்துவேன் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் உறுதி மொழியை ஏற்று ஆட்டோ டிரைவர்கள் புறப்பட்டு சென்றனர்


















