Home செய்திகள் உலக செய்திகள் மேலும் ஒரு கடல் வழியை மூடுவோம்

மேலும் ஒரு கடல் வழியை மூடுவோம்

வாஷிங்டன்: ஏப்ரல் 6 –
அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் மேலும் ஒரு முக்கிய கடல் நீர் வழித்தடமான
பாப் அல்-மண்டேப்”-ஐ மூடத் தயங்க மாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடுவுக்கு அடிபணிய மறுத்துள்ள ஈரான் அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதோடு உலகின் எரிபொருள் விநியோகத்திற்கு மிகப்பெரிய ஜல சந்தியாக திகழும் மேலும் ஒரு கடல் வழிப் பாதையை மூடுவதாகவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கெடு இன்று இரவு முடிய உள்ள நிலையில் ஈரான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும், உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கியத் தடைப் புள்ளியான பாப் அல்-மண்டேப் நீர்வழி, தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெய் மற்றும் பிற முக்கியப் பொருட்களின் இலக்காக உள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் இந்த ஜலசந்தியை மூடுவதாக ஈரான் இப்போது அச்சுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முட்டாள்தனமான தவறுகளுக்கு வரும் நாட்களில் விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஈரானை மீண்டும் அச்சுறுத்தினால், மற்றொரு முக்கிய நீர்வழியான “பாப் அல்-மண்டேப்”-ஐ மூட வேண்டியிருக்கும் என்று ஈரான் நேரடியாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் ஈரானிய ஆலோசகர் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிகட்டும் வகையில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அதுவரை அமெரிக்காவின் சமரச திட்டத்தை ஏற்க மாட்டோம் என்றும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், உலகளாவிய வர்த்தக மற்றும் எரிசக்தி சந்தைகளில் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் ஈரான் ஏற்கனவே ஹார்மூஸ் நீரிணையை மொத்தமாக கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தற்போது அடுத்தாக ஒரு முக்கிய வழித்தடத்தை முடக்க உள்ளதாக எச்சரித்துள்ளது. அதுதான் Bab al-Mandab Strait, இது உலக வரைபடத்தில் சிறியதாகத் தோன்றினாலும், உலக பொருளாதாரத்தில் இந்த நீரிணை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
ஈரான் இந்த பாப் அல் மண்டப் பாதையை முடக்கினால் சவுதி அரேபியாவின் வர்த்தகம், பொருளாதாரம், வருமானம் என அனைத்தும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கும் அபாயம் இந்த வழித்தடத்திக்கு உள்ளது.
எண்ணெய் போக்குவரத்து அமெரிக்காவின் எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தினமும் சுமார் 4.1 மில்லியன் பேரல் பெட்ரோலியம் பொருட்கள் இந்த நீரிணை வழியாக சென்றுள்ளது. இது ஹார்மூஸ் வழியாக செல்லும் 20 மில்லியன் பேரலுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. எப்படி? இது ஹார்மூஸ் வழித்தடம் முடங்கும் போது எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று பாதையாகவும் பாப் அல் மண்டப் நீரிணை செயல்படுகிறது. சவுதி அரேபியாவின் Yanbu துறைமுகத்திற்கு தினமும் சுமார் 7 மில்லியன் பேரல் எண்ணெய் குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து, அது செங்கடல் வழியாக பாப் அல்-மண்டப் நீரிணையை கடந்து உலக சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது இது முடக்கப்பட்டால் சவுதியின் பெரும்பகுதி வர்த்தகம் முடங்கும்.
மத்திய கிழக்கின் எரிசக்தி பொருளாதாரத்தில், சவுதி அரேபியா மிக முக்கியமான நாடாக உள்ளது. இந்த நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றாக பாப் அல் மண்டப் நீரிணை திகழ்கிறது. குறிப்பாக ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தினமும் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் இந்த வழியாக அனுப்பப்படுகிறது சவுதி. இதனால், இந்த நீரிணையின் பாதுகாப்பு சவுதி பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய விஷயமாகும். ஹார்மூஸ் நீரிணை பாதையில் பதற்றம் அல்லது தடைகள் உருவானால், பாப் அல்-மண்டப் நீரிணை முக்கிய மாற்று பாதையாக சவுதி அரேபியாவுக்கு செயல்படுகிறது. சவுதி அரேபியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கு எண்ணெய் குழாய்கள் மூலம் கொண்டு எரிவாயு, கச்சா எண்ணெய் செல்லப்பட்டு, அங்கிருந்து செங்கடலில் இந்த நீரிணை வழியாக உலக சந்தைகளுக்கு சவுதி அரேபியா ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், ஹார்முஸ் பாதை பாதிக்கப்பட்டாலும், சவுதி தனது ஏற்றுமதியை தொடரும் வாய்ப்பு பாப் அல் மண்டப் நீரிணை தந்தது. ஆனால் தற்போது ஈரான் ஹார்மூஸ் மற்றும் பாப் அல் மண்டெப் ஆகிய இரு முக்கிய கடல் வழித்தடங்களும் ஒரே நேரத்தில் முடக்கும் காரணத்தால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பை உருவாக்கும்.
கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல், உலகளாவிய சரக்கு வர்த்தகத்திலும் பாப் அல் மண்டப் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது. Suez Canal வழியாக ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே பயணிக்கும் கப்பல்கள், இந்த நீரிணையை கடக்கின்றன. இதனால், உலக வர்த்தகத்தின் சுமார் 12% சரக்கு போக்குவரத்து இந்த பாதையை சார்ந்துள்ளது. இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் மத்திய கிழக்கை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.
ஏற்கனவே ஹார்மூஸ் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகளை ஒரு போரலுக்கு 110 டாலர் வரையில் உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு 4 டாலரை கடந்துள்ளது. மேலும் ஜேபி மோர்கன் சேஸ் ஆய்வாளர்கள், இந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலர் வரை உயரக்கூடும் என கணித்துள்ளனர். மேலும் குறுகிய காலத்தில் $120-$130 இடையே நிலைத்திருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.