Home தலைப்பு செய்தி சாத்தான்குளம்: தந்தை மகனை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை

சாத்தான்குளம்: தந்தை மகனை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை

மதுரை, ஏப்ரல்.6- சாத்தான்குளத்தில் அப்பாவி தந்தை மகன் வியாபாரிகளை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண தண்டனை விதித்து உயர் நீதி​மன்​றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.


தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான் ​குளத்​தைச் சேர்ந்​த ஜெய​ராஜ் மற்​றும் அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கரோனா ஊரடங்​கின்​போது குறித்த நேரத்​தைத் தாண்டி கடையை திறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி, இவர்​கள் இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு சாத்​தான்​குளம் போலீ​ஸார், காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று கடுமை​யாகத் தாக்​கினர்.


இதில் ஜூன் 22-ம் தேதி பென்​னிக்​ஸும், 23-ம் தேதி ஜெய​ராஜும் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசா​ரித்த நிலை​யில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​வின்​படி, சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இதை கொலை வழக்​காக சிபிஐ பதிவு செய்​து, காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்​வாளர் பால்​துரை, தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்​யப்​பட்​டு, மதுரை மத்திய சிறையில் அடைக்​கப்​பட்​டனர். இதில் பால்துரை சிறையில் உடல்​நலக் குறை​வால் உயிரிழந்​தார்.


இந்த வழக்கு விசா​ரணை கடந்த 5 ஆண்​டு​களாக மதுரை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. மொத்தம் 100-க்​கும் மேற்​பட்ட சாட்​சிகளிடம் விசாரணை நடத்​தப்​பட்டது. இதைத் தொடர்ந்​து, கடந்த 23-ம் தேதி நீதிபதி முத்​துக்​குமரன் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.


அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.


போலீ​ஸார் தாக்கிய​தால்தான் தந்​தை, மகன் இரு​வரும் உயி​ரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதி​மன்​றம் வரு​கிறது. சாட்​சி​யங்களின் அடிப்படை​யில் 9 பேர் மீதான கொலைக் குற்​றச்​சாட்டு சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த வழக்​கில் ஸ்ரீதர் உள்​ளிட்ட 9 பேரும் குற்​றவாளி​கள் என முடிவு செய்​யப்​படு​கிறது. இவர்​களுக்​கான தண்​டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்​கப்​படும்’’ என தெரி​வித்​தார்.


இதையடுத்து, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும், மதுரை அரசு மருத்​து​வமனை​யில் உடல், மனநல பரிசோதனை நடத்​தப்​பட்​டு, அதற்​கான அறிக்​கையை மருத்​து​வர்​கள் நீதி​மன்​றத்​தில் நேற்று தாக்​கல் செய்​தனர். இதைத் தொடர்ந்​து, குற்​ற​வாளி​கள் 9 பேரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். உயிரிழந்த ஜெய​ராஜ், பென்னிக்ஸ் குடும்​பத்​தினரும் வந்திருந்​தனர்.


நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்​தது. அப்​போது தண்​டனை விவரம் தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்​கல் செய்​யாத​தால், ஏப்​ரல் 2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்​கப்​படும் என நீதிபதி உத்​தர​விட்டு விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.


இதற்கிடையே, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் உச்​சபட்ச தண்டனை வழங்க வேண்​டும் என, உயி​ரிழந்த ஜெய​ராஜ் குடும்​பத்​தினர் வலி​யுறுத்​தி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.இந்நிலையில், நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்​தது. “இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை, மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பெனிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானடு என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆனாலும், இந்தக் குற்றம் குறைந்தபாடில்லை.


அண்மையில் கூட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணமடைந்தார். சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரிதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது,” என்று தீர்ப்பு வழங்கினார். போலீஸாரால் அடித்து கொல்லப்பட்ட தந்தை மகன் வியாபாரிகள் குடும்பத்தினர் இந்த தீர்ப்பை வரவேற்று ஆனந்த கண்ணீர் விட்டனர்.