
மதுரை: ஏப்ரல் 7-
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ்.இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரை அழைத்து வருவதாகக் கூறி மகன் பென்னிக்ஸ் பின்னர் காவல் நிலையம் சென்றார்.
தந்தை, மகன் இருவரையும் போலீஸார் நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்பேரில், சிபிசிஐடியிடம் இருந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் விசாரித்து 9 பேரும் குற்றவாளிகள் என மார்ச் 23-ம் தேதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி நேற்று அறிவித்தார். இதற்காக 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம்: இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘காவல் மரணச் சம்பவங்கள் சகிக்க முடியாத குற்றம்’ என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘காவல் மரணம் கொடூரமானது. குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணை காட்டக் கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது.
காவல் மரணங்களைத் தடுக்கவும், கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காகவும் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளன. அவற்றை காற்றில் பறக்கவிட்டு தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும், தங்களைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டும் என்ற நோக்கிலும் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தைக் காக்க வேண்டியவர்களால் குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை 5 ஆண்டுகள் 9 மாதங்கள் நடந்துள்ளது. முதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். காவலர் பால்துரை கரோனா தொற்றுக்கு ஆளாகி சிறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















