
புதுச்சேரி: ஏப்ரல் 7-
புதுச்சேரி பாஜக சார்பில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் நேற்று மாலை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டு வேட்பாளரும், அமைச்சருமான நமச்சிவாயம் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. புதுச்சேரியை உயர்ந்த, உன்னதமான இடத்துக்கு என்டிஏ அரசு எடுத்துச் செல்லும் என உறுதி அளிக்கிறேன்.
காங்கிரஸின் நாராயணசாமி ஆட்சி, புதுச்சேரி மாநிலத்தை பின்னோக்கி தள்ளிவிட்டது. இதை சரிசெய்யவே 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது புதுச்சேரி வளர்ச்சியை நோக்கிச் செல்ல மீண்டும் இந்தக் கூட்டணி வெற்றிபெற வேண்டும்.
புதுச்சேரியில் கடந்தமுறை என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றபோது காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘இந்தியாவில் ஒரு சிறிய இடத்தில் வெற்றி பெற்றதை பெருமையாக பேசுகிறீர்கள்’ என்று எள்ளி நகையாடினார். 300 இடங்களாக இருந்தாலும், 30 இடங்களாக இருந்தாலும் புதுச்சேரி இந்தியாவின் ஒரு அங்கம். எங்கள் இதயத்தில் உள்ள மாநிலம். பாரதத்தின் வெற்றிக்கு புதுச்சேரியின் வெற்றி மிகவும் அவசியம். நமச்சிவாயத்துக்கு புதுச்சேரியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு உள்ளது. பிரதமர் மோடி ஆயிரமாயிரம் கோடியை புதுச்சேரிக்கு வழங்கியதில் நமச்சிவாயத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.
அவர் பல வேலைவாய்ப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். என்டிஏ கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் இண்டியா கூட்டணியில் இப்போதே தொகுதிக்காக, பதவிக்காக, சண்டை போட்டுக் கொள்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுகின்றன. திமுகவும், காங்கிரஸும் கூட ஒன்றாக இல்லை. அவர்கள் 5 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். நமது கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருந்து, ஒற்றுமையை பறைசாற்றி வருகின்றன. ஒவ்வொரு துறையாக வளர்ச்சி திட்டங்களை கொடுத்து புதுச்சேரியை முன்னேறிய மாநிலமாக ஆக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆனால் ராகுல் பாகிஸ்தான் விலை உயர்வை கூறி மக்களை பயமுறுத்துகிறார். புதுச்சேரி பெரும் வளர்ச்சியை நோக்கி செல்ல, 5 ஆண்டு ஆட்சியின் வெற்றி தொடர என்டிஏக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


















