Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் மனித சங்கிலி வியூகம்

ஈரான் மனித சங்கிலி வியூகம்

தெஹ்ரான்: ஏப்ரல் 7-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் மனிதச் சங்கிலி அமைக்குமாறு ஈரான் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் அலிரெஸா ரஹ்மானி, தனது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, “பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்ற செய்தியை உலகிற்குத் தெரிவிக்க நாம் கைகோர்ப்போம்” என்று கூறினார்.
பிரகாசமான எதிர்காலத்திற்கான ஈரானின் இளைஞர் மனிதச் சங்கிலி” என்ற தலைப்பில் ஒரு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி ஏப்ரல் 7 அன்று நாட்டின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஒரே நாளில் ஈரான் அழிக்கப்படலாம் என்று டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்திருந்தார். ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை என்றால், ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என்று அவர் கூறினார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்ப் விடுத்த கெடு முடிவடைய நிலையில், மின்கட்டமைப்புகளை பாதுகாக்க இளைஞர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே அதி நவீன ஏவுகணைகளை குவித்து தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரானின் பதிலடி நடவடிக்கையால் அங்கு உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு இறுதி கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் அந்த நாட்டை ஒரே நாளில் தகர்த்துவிடுவேன் எனவும் ஈரானில் உள்ள எண்ணெய் வளங்களை அமைரிக்கா கைப்பற்றும் என்றும் கூறினார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை நாங்களே கட்டுப்பாட்டில் எடுத்து அதற்கு சுங்க வரிகளை வசூலிப்போம் என்றும் டிரம்ப் அதிரடியாக தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் சக்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியது.
இந்த நிலையில், ஈரானின் மின் நிலையங்களை பாதுகாக்க அந்த நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அந்நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், ஈரானின் முக்கிய மின் நிலையங்களை சுற்றி மனித சங்கிலியாக கை கோர்த்து நின்று தங்கள் அடையாள ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு இளைஞர்களும் 2 மணி முதல் அங்கு கூட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். டிரம்பின் இறுதி கெடு முடிவதற்கு 13 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. வீடியோ மெசேஜில் ஈரான் இளைஞர் நலன் அமைச்சர் அலிரெசா ரஹிமி கூறுகையில், இளைஞர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மனிதசங்கிலி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இளைஞர்கள், இளம் கலைஞர்கள், இளைஞர் அமைப்புகள் ஆகியோர்தான் மின் நிலையங்களை சுற்றி நாங்கள் மனித சங்கிலியாக திரள்கிறோம் என்று கூறினர். நாட்டின் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற இளைஞர்களின் அர்ப்பணிப்பை இந்த முடிவு காட்டுகிறது” என்று கூறினார். மறைமுகமாக பேச்சுவார்த்தை? அமெரிக்கா முன்மொழிந்த 45 நாள் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்த ஈரான், முற்றிலும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து இருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றும் ஈரான் கூறியுள்ளது. கடந்த முறை பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டு இருந்தபோதே இருமுறை அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறியுள்ளது. ஒருபக்கம் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும் மற்றொரு பக்கம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பெயர் வெளியிட விரும்பாத ஈரான் அதிகாரியும் இதனை உறுதி செய்துள்ளார். பிராந்திய அதிகாரிகள் இருபக்கமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறினர். டிரம்பும் ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவே கூறி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.