Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு?

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு?

நியூயார்க், ஏப்ரல் 7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது கடுமையான போரை தொடங்கின. இந்தப் போர் ஒரு மாத காலத்திற்கு மேலாக நீடிக்கிறது. ஈரான் இந்த போரில் தங்களுடைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட பல முக்கியமான தலைவர்களை இழந்திருக்கிறது. இதனால் கடும் கோபத்தில் இருக்கக்கூடிய ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஏற்றி வரக்கூடிய கப்பல்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்து சேர முடியவில்லை. இது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பெருமளவு உயர செய்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. இலங்கை ,பாகிஸ்தானில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து கப்பல்களும் பாதுகாப்பாக சென்று வரக்கூடிய வகையில் ஈரான் ஹார்முஸ் ஜல சந்தியை திறக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார். இன்று நள்ளிரவுடன் அந்த காலக்கெடு முடிகிறது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும் டிரம்ப், ஒருநாள் இரவிலேயே ஈரானை நாங்கள் அழித்து விடுவோர்ம், அது செவ்வாய் கிழமை இரவாகவே கூட இருக்கலாம் என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தாக வேண்டும் இல்லை என்றால் ஈரான் நரகத்திற்கு சென்று விடும் என டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்.